நித்தியானந்தாவிற்கு அணிவித்த தங்க கிரீடம், அவர் மடத்திற்கு வழங்கிய ரூ.ஒரு கோடி போன்றவை குறித்து ஆதீனத்திடம், விசாரணை நடந்தது. இதன் பின்னணியில் தி.மு.க., மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் இருப்பதாக நித்தியானந்தா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மதுரை ஆதீனம் மடத்தின் 292வது சன்னிதானமாக அருணகிரிநாத சுவாமிகள் (ஆதீனம்) உள்ளார். பிடதி ஆசிரம நிறுவனர் நித்தியானந்தாவை 293வது சன்னிதானமாக, ஆதீனம் முடிசூட்டினார். இதற்கு, மற்ற ஆதீனங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பத்து நாட்களுக்குள் மதுரை ஆதீனம், முடிவை மாற்ற கெடு விதித்தனர். மற்ற ஆதீனங்கள் முடிவை பத்து நாட்களுக்குள் திரும்ப பெற நித்தியானந்தா வலியுறுத்தினார். நித்தியானந்தாவிற்கு எதிராக இந்து அமைப்பினர் போராடி வருகின்றனர்.
ஆதீனம் மடத்தில் ரெய்டு: இந்நிலையில் மதுரை ஆதீனம், நித்தியானந்தா திருவண்ணாமலையில் பட்டாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். இதில் பங்கேற்க இரு நாட்களுக்கு முன் நித்தியானந்தா சென்றார். மதுரை ஆதீனம் நேற்று காலை அங்கு புறப்பட இருந்தார். காலை 8 மணிக்கு வருமான வரி மண்டல இயக்குனர் கிருஷ்ணசாமி உத்தரவுப்படி, துணை கமிஷனர் சுந்தரேசன் தலைமையில், இருபெண் அதிகாரிகள் உட்பட ஏழு பேர் மடத்திற்கு வந்தனர். மதியம் 2 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர். நித்தியானத்தாவிற்கு ஆதீனம் அணிவித்த தங்க கீரிடம், மடத்திற்கு வழங்கப்பட்ட ரூ.ஒரு கோடி குறித்து ஆதீனத்திடம் விசாரணை நடந்தது. முக்கிய ஆவணங்கள், வங்கி புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. நிகழ்வுகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. ரெய்டு குறித்து கூற அதிகாரிகள் மறுத்தனர்.
தி.மு.க., மீது குற்றச்சாட்டு: நித்தியானந்தாவின் பி.ஆர்.ஓ., பாண்டிசெல்வம், ""பிடதி ஆசிரமத்தில் நடக்காத ரெய்டா, இங்கு நடந்து விடப்போகிறது. அங்கு, ருத்ராட்சம் மாலைக்கு கூட கணக்கு இருந்தது. மதுரை ஆதீனத்தில் ரெய்டு நடக்கும் என தெரியும். ஆதீனம், நித்தியானந்தா மீது தமிழக அரசு நல்ல மதிப்பு வைத்துள்ளது. இதனால் மத்திய அரசு மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். இதன் பின்னணியில் தி.மு.க., மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் இருக்கிறார்,'' என்றார். ரெய்டுக்கு பின் ஆதீனம் திருவண்ணாமலை சென்றார். அவர், ""கணக்குகளை சரிபார்க்க வந்தனர். அவ்வளவு தான்,'' என்றார். மடத்தில் ரெய்டு நடந்ததால் காலை, மதிய அன்னதானம் மற்றும் உச்சிகால பூஜை நிறுத்தப்பட்டது. நித்தியானந்தாவின் சீடர்களுக்கு மதியம் சாதத்துடன் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்கீரை மற்றும் "புடலை' பொறியல் பரிமாறப்பட்டது.
உளவுத்துறை உஷார்: மத்திய புலனாய்வு, மாநில உளவுத்துறையினர் மடத்திற்குள்ளும், வெளியிலும் கண்காணித்தனர். இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன், தேவர் தேசிய பேரவை தலைவர் திருமாறன் உட்பட சிலர் ""மடத்தை மீட்கும் வரை போராடுவோம். முதற்கட்டமாக போலீஸ் கமிஷனிடம் புகார் அளித்தோம்,'' என்றனர்.
No comments:
Post a Comment