‘ஏராளமான’ என்றால், பா.ம.க.-வுக்கு விழும் ஓட்டுக்கள் போல சொற்ப அளவில் அல்ல. லட்சக்கணக்கான இளைஞர்கள் டாக்டர் ராமதாஸின் சொல்கேட்டு சொல்லியடிக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று (அவரே கூறியதால்) தெரியவருகிறது.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழாவில் அவர் பேசியபோதே இந்த உண்மையை வெளியிட்டார்.
இளைஞர் பெருவிழாவில் டாக்டர், “வன்னியர் பரம்பரை நாடாண்ட பரம்பரை. மீண்டும் நாம் நாட்டை ஆளவேண்டும்” என்று முழங்கினார். எந்த நாட்டை ஆட்சி செய்யும் உத்தேசம் இருப்பதாக அவர் கூறவில்லை என்றாலும், லட்சக்கணக்கில் ஆட்கள் தயாராக இருப்பதால், தமிழகத்தையே ஆளும் திட்டம் இருப்பதாக தெரிகிறது.
அதை உடனடியான நடைமுறைப்படுத்துவாரா, அல்லது, அன்புமணிக்கு யாரிடமாவது ஏதாவது ஒரு கட்சியிடம் கெஞ்சி எம்.பி. சீட் பெற்றுக் கொடுத்துவிட்டு, அப்புறமாக நாடாள வருவாரா என்பதையும் விழா மேடையில் அவர் அறிவிக்கவில்லை.
டாக்டர் பரம்பரை ஆட்சி முடிந்து, தற்போது ஆட்சி செய்பவர்கள் பற்றியும் போட்டு விளாசித் தள்ளியிருக்கிறார் அவர். “இலவசங்களை கொடுத்து நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டார்கள். 45 ஆண்டுகளாக ஆட்சியை நடத்திய இவர்களுக்கு ஆள தகுதி இல்லை” என்ற கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இந்த 45 ஆண்டுகளில், அத்தனை ஆண்டுகள் அவர்களுடன் இவர் கூட்டணி வைத்துக் கொண்டார் என்ற விபரத்தை வெளியிடவில்லை பாருங்கள், அங்கேதான் நிற்கிறார் நம்ம தலைவர். இந்த சாமர்த்தியத்துக்காகவே டாக்டருக்கு நாட்டை ஆள ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்க்கலாம்.
நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் ஹார்ம்லெஸ் திட்டத்தை அறிவித்த பெரிய ஐயா, அடுத்து அதிர வைக்கும் திட்டம் ஒன்றையும் மேடையில் அறிவித்தார். “வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்து உள்ளது” என்பதே அந்த அதிரடி.
அந்தப் போராட்டம் எப்படி நடைபெறும்? இதோ டாக்டரின் வார்த்தைகளிலேயே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். “போராட்டத்தை மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தினால் தமிழகம் தாங்குமா? எங்கள் இளைஞர்கள் போராட தயாராக இருக்கிறார்கள். அவர்களை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது. தமிழக சிறைகளை நிரப்ப லட்சக்கணக்கான பாட்டாளி இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் சிறை செல்ல தயங்க மாட்டோம்”
மேலேயுள்ள கூற்றில் ஒரு விஷயத்தில் டாக்டர் நிஜத்தையே கூறியிருக்கிறார். “லட்சக்கணக்கான எங்கள் இளைஞர்களை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது” என்று கூறியிருப்பது நிஜம்தான்.
லட்சக்கணக்கானவர்களை கட்டுப்படுத்த முடிந்திருந்தால், அவர்களை கடந்த தேர்தலில் பா.ம.க.-வுக்கு ஓட்டு போட வைத்திருப்பாரே! பல இடங்களில் டெபாசிட் அல்லவா போச்சு!
இவ்வளவையும் தெரிவித்த டாக்டர் ஐயா, இறுதியில் ராஜதந்திரிகளுக்கே உரித்தான சாமர்த்தியத்துடன் ஒரு பிரகடனம் செய்துள்ளார். “பா.ம.க. நடத்தவுள்ள போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு ஒரு வருடம் சிறையில் இருக்க தயார்” என்பதே அந்த பிரகடனம்.
இதில் என்ன ராஜதந்திரம் உள்ளது என்று கேட்கிறீர்களா? அமைச்சர் சண்முகம் உறவினர் கொலை கேஸில் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் டாக்டர், தம்மால் மேக்ஸிமம் 1 வருடம்வரை ஜெயிலில் இருக்க முடியும் என்று சி.பி.ஐ.-க்கு மறைமுகமாக சிக்னல் கொடுத்திருக்கிறார்.
No comments:
Post a Comment