Friday, May 4, 2012

ஜெயலலிதா தயவால், ‘பூச்சியத்தில் இருந்து ராஜ்ஜியத்துக்கு’ வந்தவர்!


தி.மு.க.-வும், அ.தி.மு.க.-வும் போட்டிபோட்டுக் கொண்டு தே.மு.தி.க.-வையும், அதன் தலைவர் விஜயகாந்தையும் வளர்த்து விடுவது என்று செயல்படுகின்றன. தி.மு.க., புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டு, தே.மு.தி.க. வளர்வதற்கு ஒரு சான்ஸ் கொடுத்திருக்கிறது. அ.தி.மு.க., சட்டசபையில் அவ்வப்போது விஜயகாந்தை சிண்டி, இலவச விளம்பரம் கொடுத்துவருகிறது.

சட்டசபையில் பேசிய அமைச்சர் தங்கமணி, “விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைவர் கூறுகிறார். ஜெயலலிதா நினைத்தால் 1ஐ 29ஆக மாற்றவும் முடியும். 29ஐ ‘0‘வாக மாற்றவும் முடியும்’ என்று வழமையான சீண்டலை துவங்கினார்.

அமைச்சர் பேசியது, தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளிப்பதற்காக!  இப்போதெல்லாம் அமைச்சர்கள் பேசத் துவங்கும்போது அம்மா நாமம் வாழ்க என்று ஒரு தடவை சொன்னால், விஜயகாந்த் நாமத்தை 4 தடவை சொல்வது என்ற எழுதப்படாத சட்டத்தைக் கடைப்பிடிப்பது வழக்கம்.

பல அமைச்சர்கள், பழைய விஜயகாந்த திரைப்பட டி.வி.டி.களை பார்க்கத் துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் விஜயகாந்த் பேசியுள்ள ஏதாவது ஒரு டயலாக் புதையல்போல கிடைத்துவிட்டால், அந்த வாக்கியத்தை விமர்சித்து பேசி அம்மாவிடம் அப்ளாஸ் பெறும் ஐந்தாண்டுத் திட்டமாம் அது!

அமைச்சர் தங்கமணி, விஜயகாந்துக்கு இப்படி இலவச விளம்பரம் கொடுக்க முன்வரும்போது, அதை வேண்டாம் என்று தட்டிவிட தே.மு.தி.க.காரர்கள் என்ன முட்டாள்களா? தே.மு.தி.க. ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அமைச்சரின் கூற்றுக்கு பதில் கொடுத்தார். “விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டாம் என்று எந்த இடத்திலும் எங்கள் தலைவர் சொல்லவில்லை. கடுமையான மின்வெட்டு இருக்கும்போது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தும் பயனில்லை என்றுதான் கூறினார். 29ஐ 0வாக ஆக்க முடியும் என்றார் அமைச்சர். ‘0‘வை கூட 234ஆக மாற்றுவது மக்கள் கையில்தான் உள்ளது” என்றார்.

வாதத் திறமை தமக்கும் உள்ளது என்று சட்டசபையில் காட்ட சந்தர்ப்பம் கொடுத்த அமைச்சர் தங்கமணிக்கு, சந்திரகுமார் உள்மனதில் கோவில் கட்டியிருப்பார்.

இந்த இடத்தில், விஜயகாந்த் நாமத்தை மனதில் உருப்போட்டபடி அமர்ந்திருந்த அற்றொரு அமைச்சர் துள்ளியெழுந்தார். அவர், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

அந்த அறிஞர் என்ன சொன்னார்? “தே.மு.தி.க.-விடம் தற்போது உள்ள 29 எம்எல்ஏக்கள் கூட அம்மா கொடுத்த …..” என்று புள்ளியிட்ட இடத்தில் ஒரு சொல்லை சொன்னார். இந்த அமைச்சர் அ.தி.மு.க.வுக்கும், தே.மு.க.-வுக்கும் மட்டுமல்ல, தமிழகத்துக்கே கிடைத்த ஒரு கொடை. (அதுதான் இவரை, மின்சாரத் துறைக்கு அமைச்சராக்கி உள்ளார் அம்மா)

இதற்கு தே.மு.தி.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் கூறிய வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தே.மு.தி.க.வினர் அனைவரும் எழுந்து குரல் கொடுத்தனர். அதையடுத்து அமைச்சர்களும் தே.மு.தி.க. உறுப்பினர்களும் காரசாரமாக வார்த்தைகளால் மோதிக் கொண்டனர்.

தமது சக அமைச்சரின் வாய்வன்மை குறித்து சீனியர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கேகூட கொஞ்சம் கூச்சம் ஏற்பட்டு விட்டது போலிருக்கிறது. அவர் எழுந்து, “மின்துறை அமைச்சர் கூறிய வார்த்தையை நீக்கிவிட்டு, ‘அம்மா கொடுத்த தயவால்‘ என்று திருத்தி கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

என்னதான் இருந்தாலும் ஓ.பி.எஸ்., அடிப்படையில் பண்பாகப் பேசத்தெரிந்த தெரிந்த, கிராமத்தில் இருந்து வந்தவர் அல்லவா?

சபாநாயகர் ஜெயக்குமாருக்கும் பண்பு தெரிந்திருக்கலாம். ஆனால் அதற்காக சக அமைச்சர்களின் வீர வசனங்களை நிக்கிவிட்டு, நாளைக்கே அம்மாவிடம் யாராவது போட்டுக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்று, சபாநாயகர் ஆசனத்தில்  நெளிந்து கொண்டிருந்தார்.

சீனியர் அமைச்சர் பன்னீர்செல்வமே, ‘மின்சாரத்தின் வார்த்தைகள்’ கேவலமாக இருப்பதை கண்டு மாற்றச் சொல்லி சிக்னல் கொடுத்தவுடன், உடனடியாகவே, “அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறிய வார்த்தை நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ‘அம்மா கொடுத்த தயவால்‘ என்று திருத்தப்படும்” என அறிவித்துவிட்டு, அப்பாடா என்று பெருமூச்சு விட்டார்.

என்னதான் அமைச்சர்களாகவோ, சபாநாயகராகவோ இருந்தாலும், சட்டசபையில் இப்படியான சொற் பிரயோகங்களை அனுமதித்துவிட்டு வெளியே நாலு பேர் முன்னிலையில் வெள்ளையும் சொள்ளையுமாக போவதற்கு சிலருக்கு கூச்சமாக இருப்பது இயல்புதானே.

தனது வீர வசனங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்? “மவனே.. அடுத்த தடவை இதைவிட வீரியமான வார்த்தைகளுடன் வருகிறேன்” என்று மனதுக்குள் கறுவிக்கொண்டு, தமது தெருவில் உள்ள குளாயடியை நோக்கிச் சென்றார்.

குளாயடிச் சண்டைகளில்தான் அவர், சட்டசபை பேச்சுகளுக்கு வார்த்தைகளை கலெக்ட் பண்ணுவது வழக்கம்.

அரசியலில் பிரபலம் அடைவதற்கு, அடிக்கடி செய்திகளில் அடிபட வேண்டும். விஜயகாந்த்தின் சொந்தச் செயல்பாடுகளால் அவர் மீடியாக்களில் இடம்பெறுவதைவிட, அ.தி.மு.க. தயவால் இடம்பெறுவது அதிகம்!

No comments:

Post a Comment