Wednesday, May 9, 2012

சிறையில் யாருமற்ற நிலையில் கனிமொழி, 20 நிமிடம் ‘சாமி தரிசனம்’!


2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள கனிமொழி, கடந்த சில நாட்களாக கட்சி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். ஆனால், கட்சிக்குள் ஸ்டாலின் அணி, அழகிரி அணி ஆகிய இரண்டுமே அவரை திட்டமிட்டு ஒதுக்கத் துவங்கி விட்டன.

கொலை வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரை சந்திக்க புழல் சிறைக்கு வந்தபோது, அவரை வரவேற்க வந்தவர்கள் நாலைந்து பேர் மட்டுமே!

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, திருவொற்றியூரில் நடந்த மீனவர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு,  கடந்த 6 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைதான், கனிமொழி எம்.பி. சிறைக்குச் சென்று சந்தித்தார்.

தி.மு.க. வி.ஐ.பி.-கள் வீட்டுக்கு பலாப்பழம் வாங்க பண்ருட்டி சென்றாலும், பந்தா வரவேற்பு கொடுப்பது தி.மு.க. தொண்டர்களின் வழக்கம். வரும் வி.ஐ.பி.களின் ‘வெயிட்’டைப் பொறுத்து, தொண்டர்களின் எண்ணிக்கை இருக்கும். ஏற்பாடு: மாவட்ட செயலாளர்கள்! நகர்வலம் வரும் வி.ஐ.பி. கலைஞர் குடும்பத்தை சேர்ந்தவர் என்றால், வரவேற்பு நிச்சயம்.

‘சகோதர யுத்த’ தி.மு.க.-வில், அழகிரிருக்கும், ஸ்டாலினுக்கும் ஒரே மா.செ. ஆதரவாளராக இருக்க முடியாதல்லவா? இதனால், அழகிரியும், ஸ்டாலினும் திக்விஜயம் செய்யும்போது, மா.செ., எதிர் அணி ஆளாக இருந்தால், தாமே மாற்று ஏற்பாடுகளை செய்துகொண்டு வருவார்கள்.

குறிப்பிட்ட மா.செ., அன்று ஜலதோஷம் என்று வீட்டில் படுத்து விடுவார். வாழ்க சொல்லி துண்டு அணிவிக்க தொண்டர்கள் வந்து விடுவதால், இந்த உள் விவகாரங்களையெல்லாம் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஆனால், கனிமொழி புழல் சிறையில் ‘சாமி தரிசனம்’ செய்ய சென்றபோது, மினிமம் கேரண்டி கட்சிக்காரர்களின் வரவேற்புகூட இருக்கவில்லை என்பதுதான் நியூஸ். முன்னாள் அமைச்சர் சாமி, அவரது தம்பி சங்கர் ஆகியோர் குடும்பத்தைச் சேர்ந்த சில பெண்கள் மட்டும், கனிமொழிக்கு சால்வை அணிவித்து, “வாழ்க” கோஷம் எழுப்பினர்.

ஒருவேளை கனிமொழி விசிட், ஒரு ரகசிய சந்திப்பாக இருக்குமோ என்று யோசிக்கவும் முடியாது. காரணம், சிறை அதிகாரிகளின் அனுமதி பெற்றுதான் சிறைக் கைதி ஒருவரை சந்திக்க முடியும். வி.ஐ.பி.கள் குறிப்பிட்ட ஒரு சிறையில் இருந்தால், அங்குள்ள அதிகாரிகளுடன் செய்தியாளர்கள் எப்போதும் தொடர்பில் இருப்பார்கள். சந்திப்புக்கு யாராவது வருகிறார்கள் என்றால், விஷயம் முன்கூட்டியே தெரிய வந்துவிடும்.

தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்தபோது, கனிமொழியை புறக்கணிக்கும்படி வாய்மொழி உத்தரவு, ஸ்டாலின் தரப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். “தளபதியே ஸ்ட்ரிக்டாக கடைப்பிடிக்க சொன்னார்” என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் இந்த உத்தரவை ஸ்டாலின் ஆதரவு மா.செ.க்களின் காதில் போட்டதாக சொல்கிறார்கள்.

‘கனிமொழிக்கு கட்சிப் பதவி வேண்டும்’ என்று ஏற்கனவே ராசாத்தி அம்மாள் கலகக் கொடி தூக்கியபோது, அதை சமாளிக்க ஸ்டாலின் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது அவருக்கல்லவா தெரியும்? இதனால், கனிமொழிக்கு தமிழகத்தின் எந்த மூலையிலும் செல்வாக்கு இருப்பதாக காட்ட அவர் விரும்ப மாட்டார்.

புழல் சிறையில் மொத்தம், 20 நிமிடங்கள் சாமியுடன் நடந்த சந்திப்புக்குப் பின், கனிமொழி வெளியே வந்தபோது, அவரை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் செய்தியாளர்கள்தான்.

“அ.தி.மு.க. அரசு, தொடர் வழக்குகளைப் போட்டு தி.மு.க.வை ஒடுக்கி விடலாம் என்று தவறாக கற்பனை செய்திருக்கிறது. உண்மையில் எங்களுக்கு இப்போதுதான் மன உறுதியும், நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. சாமிக்கு துணையாக தி.மு.க. இருக்கிறது. அதனால், சாமி மன உறுதியுடனும், உடல் நலத்துடனும் இருக்கிறார். தி.மு.க.வை விட்டு விலகவும் அவர் நினைக்கவில்லை” என்றார்.

‘சாமி’ மீது நம்பிக்கையற்ற தி.மு.க.வுக்கு அதிஷ்டம் அடித்த நாட்களில், ‘சாமி’ துணையிருந்த காரணத்தால், ஆட்சியமைக்க முடிந்தது என்பார்கள் ஆன்மீகவாதிகள். இப்போது கனிமொழி புழல் சிறைக்கு வந்து, ‘சாமிக்கு துணையாக தி.மு.க. இருக்கிறது’ என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

அப்படியே இருக்கட்டும். கனிமொழிக்கு நல்லது நடக்க, ஏதோ ஒரு ‘சாமி’ அருள் புரிந்தால் சரி!

No comments:

Post a Comment