தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் இருந்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நேரடியாக இந்த மெசேஜ் போய் சேர்ந்திருக்கிறது என்கிறார்கள். கருணாநிதி சார்பில் இந்த மெசேஜை தே.மு.தி.க. தலைவரிடம் கொண்டு சென்றவர், மாநில அரசியலில் அவ்வளவாக ‘தலை காட்டாத’ முன்னாள் தி.மு.க., எம்.பி.
கடந்த சில வருடங்களாகவே தமிழக அரசியலில் அவ்வளவாக தொடர்புபட்டிராத இந்த முன்னாள் எம்.பி.யை எதற்காக கருணாநிதி அனுப்பினார் என்பதில், வெவ்வேறு கருத்துக்கள் தி.மு.க. இரண்டாம், மூன்றாம் சர்க்கிள்களில் அடிபடுகின்றன.
இவருடன் பேசுவதில் தே.மு.தி.க. தலைமைக்கு எந்தச் சங்கடமும் இருக்காது என்பது ஒன்று. தமிழக அரசியலில் இவர் என்ன செய்கிறார் என்பதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பது அடுத்தது.
கடந்த தி.மு.க. ஆட்சியில், தி.மு.க. மற்றும், தே.மு.தி.க. உரசிக்கொண்ட பல சந்தர்ப்பங்கள் இருந்தன. அதுவும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்கள் சிலவற்றில் போட்டியில் இருந்து அ.தி.மு.க. ஒதுங்கிக்கொள்ள, தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளுமே நேரடியாக மோதிக்கொண்டன.
மொத்தத்தில், இரு கட்சிகளுக்கும் இடையே பழைய கசப்புகள் இன்னமும் உள்ளன.
தமிழக அளவில் தி.மு.க. அரசியலில் ஆக்டிவ்வாக இருந்த ஒருவரை விஜயகாந்த்திடம் அனுப்பினால், பழைய கசப்புகள் ஏதோ ஒரு இடத்திலாவது வார்த்தைகளாக வெடித்துவிடும் என்று ஊகித்தே கருணாநிதி, தமது கட்சியின் முன்னாள் எம்.பி. ஒருவரை ஓசைப்படாமல் அனுப்பி வைத்தார் என்று ஊகிக்கலாம்.
தே.மு.தி.க. புதுக்கோட்டையில் போட்டியிட்டால், தி.மு.க. உறுதியாக ஆதரவு கொடுக்கும் என்பதே விஜயகாந்த்திடம் போய் சேர்ந்துள்ள மெசேஜ்.
தி.மு.க. கொடுக்கப்போவது ஆதரவு மட்டுமா, அல்லது ‘வேறு ஏதாவது’ கொடுப்பதாக, தி.மு.க முன்னாள் எம்.பி. சொன்னாரா என்பதில் தான் தங்கியுள்ளது, விஜயகாந்த் எடுக்கப்போகும் முடிவு.
No comments:
Post a Comment