Wednesday, May 16, 2012

கொதிப்பில் மதுரை போலீஸ்!


மதுரை ஆதீன மடத்துக்குள் சென்று வழிபாடு நடத்த முயன்ற ‘ஆதீன மீட்புக்குழு’ ஆட்களை கைது செய்ததால், நித்தியானந்தா எதிர்ப்பாளர்கள் மதுரை போலீஸ்மீது கோபத்தில் உள்ளனர். ஆனால், மதுரை போலீஸோ, நித்தியானந்தா ஆட்கள்மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

மேலதிகாரிகள் அனுமதித்தால், நித்தி ஆட்களை போட்டு துவைத்து எடுத்துவிடும் அளவுக்கு கொதிப்பில் உள்ளனர் மதுரை போலீஸ்!

மதுரை போலீஸில் உள்ள எமது தொடர்பாளர் ஒருவருடன் பேசியபோது, காவல்துறையின் கோணம் தெரிந்தது. கொதிப்பும் புரிந்தது.

மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தா ஆட்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதில் ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த மதுரை போலீஸ், மேலதிகாரிகளின் உத்தரவு காரணமாக பல்லைக் கடித்துக் கொண்டு மடத்துக்கு பாதுகாப்பு கொடுத்தனர். அந்த நிலையில்தான் பக்தி மார்க்கத்தில் உள்ள நித்தி ஆட்களினால் பாதுகாபிஷேகம் நடத்தப்பட்டது.

பாதுகாபிஷேகம் என்பதை பாமரத் தமிழில், ‘செருப்பு வீச்சு’ என்பார்கள்.

அது எப்படி நடந்தது? மதுரை ஆதீன மடத்தில் திருஞானசம்பந்தர் பூஜை நடத்தப்படவில்லை என்று கூறி, மடத்திற்குள் பூஜை நடத்த அனுமதி கேட்ட மீட்பு குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்தே அவர்களை கைது செய்ய வேண்டிய கட்டாயம், மதுரை காவல்துறைக்கு ஏற்பட்டது.

அதன்பின், இந்து மக்கள் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 7 பேர் பூஜை நடத்த வந்தனர். அவர்களுக்கும் ஆதீன மடத்துக்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.

இதனால், இவர்கள் வீதியில் நின்றபடியே, தேங்காய் உடைத்து, சூடம், பத்தி ஏற்றி, மடத்தை நோக்கி பூஜை நடத்தினர். அவர்களையும் கைது செய்யும்படி மேலதிகாரிகள் உத்தரவு கொடுக்கவே, அங்கிருந்த போலீஸார் வேண்டா வெறுப்பாக கைது செய்ய சென்றனர். அப்போது, ஆதீன மடத்தின் மேல்மாடியில் இருந்து நித்யானந்தாவின் சீடர்கள் போலீசை நோக்கி செருப்புகளை வீசினர்.

இந்த பாதுகாபிஷே திருத்தொண்டு நடத்துவதில் முன்னின்ற ஆன்மீகப் பெருந்தகை, நித்தியின் சீடர் முத்துக்கிருஷ்ணன் என்பதை அங்கிருந்த காவலர்கள் கவனித்து விட்டனர்.

இதற்கிடையே மடத்தின் மேல்மாடியில் இருந்து செருப்பு வீசிய அடியார்களில் ஒருவர், வீசிய உற்சாகத்தில் தன்னிடமிருந்த பொருள் ஒன்றை கீழே போட்டு விட்டார். அதையடுத்து, அதை எடுத்துச் செல்லலாம் என்று நைசாக கிழே இறங்கி வந்தார். அந்த நபரை லபக் என்று பிடித்துக் கொண்டது போலீஸ்.

தமது சக அடியார் ஒருவர் போலீஸிடம் சிக்கிக் கொண்டதைக் கண்ட நித்தியின் மற்றைய அடியார் படை, கிழே வந்தது. போலீசாருடன் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு, அந்த சந்தடி சாக்கில், சிக்கிய அடியாரை மீட்டு மடத்திற்குள் அழைத்துச் சென்று விட்டனர்.

“சாமியாரின் சீடர்களில் கை வைக்கவும் முடியாது” என்று தயங்கிக் கொண்டிருந்த மதுரை போலீஸ், இந்த கெரில்லா பாணி தாக்குதலை கண்டு திகைத்துப் போயினர். வேறு வழியில்லாமல், நித்தியின் சீடர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மீது விளக்குத்தூண் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். போட்டனர்.

அதன்பின், அவர்களை கைது செய்யும் நோக்கத்துடன் இன்று காலை மடத்துக்கு சென்றபோது, மடத்தில் இருந்தவர்கள் புதிய கதை ஒன்றை கூறினர். செருப்பு வீச்சில் ஈடுபட்ட சீடர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் திடீரென மடத்தில் இருந்தே தலைமறைவாகி விட்டனர் என்றார்கள் மடத்தில் இருந்த சீடகோடிகள்.

எமது போலீஸ் தொடர்பாளர், “மதுரை போலீஸ் மகா கொதிப்பில் உள்ளது. ‘நடவடிக்கை எடுங்கள்’ என்று ஒரு சிறிய உத்தரவு கிடைத்தால் போதும்… நித்தியின் ஆட்களை, சொர்க்கத்தின் பாதையில் பாதித் தொலைவுக்காவது அழைத்துச் செல்லாமல் விடமாட்டார்கள்” என்றார்!

No comments:

Post a Comment