Wednesday, May 9, 2012

‘உத்தரவுப்படி’ ரகசியம் காக்கப்பட்ட அத்வானியின் மதுரை விசிட்!


மதுரைக்கு அத்வானி மீண்டும் வருவதானால், நாம் சொல்லும் வரை அவர் விஜயம் செய்யும் தேதிகள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்” என்று மதுரை போலீஸ், லோக்கல் பா.ஜ.க.-வினரிடம் கண்டிப்பாக கூறியிருந்தது. இப்போது, மதுரைக்கு அத்வானி வரும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களில் (வியாழக்கிழமை) மதுரை வருகிறார் அவர்.

அத்வானி வருகை ரகசியமாக வைக்கப்பட வேண்டிய காரணம், அவர் மதுரையில் தங்கியிருக்கும்போது, குண்டு வெடிப்புகள் நடக்கலாம் என்ற அச்சம்தான். கடந்த செப்டெம்பரில் அவர் மதுரை வந்தபோது, அவரது ரத யாத்திரை செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது.

சில தினங்களுக்குமுன் அவர் மதுரையில் பங்கேற்பதாக இருந்த கூட்டம் மழை கபாரணமாக ஒத்தி வைக்கப்பட்டபின், மதுரை ராமர் கோவிலில் ஒரு சைக்கிள் குண்டு வெடித்தது.

அதனால், அடுத்த தடவை அத்வானி மதுரை வரும்போது எந்த ரிஸ்க்கையும் எடுக்க தயாராக இல்லை காவல்துறை.

பா.ஜ.க.-வின் மாநில மாநாடு வரும் வியாழன், வெள்ளி (10-ம், 11-ம் தேதிகள்) தினங்களில் நடைபெறுகிறது. நடைபெறவுள்ள இடமும் மதுரைதான். அத்வானியும் அதில் கலந்து கொள்கிறார்.

மாநாடு தொடர்பான விபரங்கள் முன்கூட்டியே மதுரை காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. காவல்துறையின் உத்தரவுப்படி, அத்வானி வரும் விஷயத்தை மாநில பா.ஜ.க. ரகசியமாகவே வைத்திருந்தது. அத்வானி மதுரையில் தங்கியிருக்கும் இரு தினங்களும் செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு பிரிவு எஸ்.பி. பாலசுப்ரமணியன் தலைமையில் ஒரு குழு ஆராய்ந்தது. மாவட்ட கலெக்டர், சட்டம் ஒழுங்கு பிரிவினர், தீயணைப்பு படையினர் என அனைத்துத் தரப்பினரும் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆலோசனையின்பின், அத்வானிக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும் என்று மதுரை போலீஸ் முடிவு செய்துள்ளது. அதன்பின்னர், அத்வானியின் வருகையை வெளிப்படையாக அறிவிக்கலாம் என பா.ஜ.க. மாநிலத் தலைமைக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது.

மத்திய மற்றும் மாநில உளவுத்துறைகள் மதுரையில் தமது முதல்கட்ட வேலைகளை முடித்துவிட்டன. மீனாஷி ஆலயம் முதற்கொண்டு பல இடங்கள் சோதனை செய்யப்பட்டு விட்டன. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல், மதுரையின் வாயில்கள் அனைத்திலும் காவல் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அத்வானி, மத்திய அரசின் ‘Z-Plus’ பிரிவு பாதுகாப்பு வளையத்தில் உள்ளார்.

No comments:

Post a Comment