பொதுவாக அ.தி.மு.க.வில் லோக்கல் அமைச்சரே மாவட்டச் செயலாளராகவும் இருப்பார். அதில் சிக்கல் கிடையாது. சிக்கல் எப்போது வரும் என்றால், அதே மாவட்டதைச் சேர்ந்த மற்றொருவரும் அமைச்சராகும் போதுதான். ஒரு உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது என்ற தத்துவத்தின் அடிப்படையில் இருவரிடையேயும் மோதல் துவங்கும்.
அப்புறம் என்ன, உள்கட்சி திருவிழாதான்.
இந்தத் திருவிழாக்கள் புதுக்கோட்டையில் கிடையாது என்றிருக்கிறார் அமைச்சர் ஓ.பி.எஸ். அதை வேறு விதத்தில் சொல்லப் போனால், மற்றைய தொகுதிகளில் கட்சிக்குள் இழுபறிகள் இருப்பதாக ஒப்புக் கொள்கிறார் அவர். இருந்துவிட்டு போகட்டும். அதுகூட இல்லையென்றால் போர் அடிக்கும்.
சரி. இதையெல்லாம் எதற்காக வெளியே சொல்கிறார் அமைச்சர்?
“கட்சிக்குள் ஆளையாள் இழுத்து வீழ்த்தும் ஷோ இல்லை என்பதால், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை விட பெரிய வெற்றியை புதுக்கோட்டையில் நாம் பெற வேண்டும். இங்கு குறைந்தது ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்! (ஓஹோ.. சங்கரன்கோவிலில் உள்கட்சி இழுபறிகள் உள்ளனவா?)
அ.தி.மு.க.- அமைச்சர்களின் அடுத்த மெகா ஷோ, அடுத்த மாதம் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளதால், புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம், புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. இப்படியான கூட்டங்களில் தலையைக் காட்டாவிட்டால், அதை சுடச்சுட கார்டனில் ‘போட்டுக் கொடுக்க’ ஆட்கள் தயாராக இருப்பதால், பெரும்பாலான அமைச்சர்கள் கூட்டத்தில் ஆஜர்.
அங்கு வைத்து தமது தேர்தல் வியூக ஆலோசனையை துவங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம், “சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில், நமக்கு 94,977 ஓட்டுகள் கிடைத்தன. வெற்றி வித்தியாசம், 68,757 ஓட்டுகள். புதுக்கோட்டை தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தைவிட குறைவு. இதனால், ஒன்றரை லட்சம் ஓட்டுகள் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், எமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்” என்றார்.
நியாயமான ஆசைதான். அதை வெளிப்படையாக, வெள்ளாந்தியாக பேசிவிட்டார் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 32 அமைச்சர்களின் உழைப்புக்கு ஒரு லட்சம் லீடிங் கிடைத்தால், அம்மாவும் சந்தோஷப்படுவார்.
ஆனால், புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைச்சர் பேசிய இந்தப் பேச்சை, யாராவது அமைச்சர் தாம் நல்ல பெயர் வாங்க, லேசாக ட்டுவிஸ்ட் பண்ணி கார்டனில் போட்டுக் கொடுத்தால் என்னாகும்?
அப்படியான ஆர்வம் யாராவது அமைச்சருக்கு இருந்தால், இதோ 2 பாயின்ட்டுகள்:
1) அமைச்சர் ஓ.பி.எஸ். புள்ளிவிபரங்களை வைத்து புகுந்து விளையாடுவதைப் பார்க்கும்போது, இவர் அடிக்கடி விஜயகாந்த் திரைப்படங்களை பார்ப்பார் போலிருக்கிறதே. ஒருவேளை இவர் விஜயகாந்த ரசிகராக இருப்பாரோ?
2) அவரது புள்ளிவிபரத்தின்படி, ஒன்றரை லட்சம் ஓட்டுக்களில், ஒரு லட்சம் ஓட்டுக்களை அ.தி.மு.க. பெற வேண்டும் என்பதை கவனித்தீர்களா? அதன் அர்த்தம் என்ன? ஐம்பதாயிரம் ஓட்டுக்கள் எதிர்க்கட்சிகளுக்கு விழும் என்று நம்ம சீனியர் அமைச்சரே சொல்லுகிறார். இவரை எப்படிம்மா நம்புவது?
No comments:
Post a Comment