இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., முத்துக்குமரன் மறைவையடுத்து, புதுக்கோட்டை தொகுதிக்கு, ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், அ.தி.மு.க., வேட்பாளராக, கார்த்திக் தொண்டைமான் அறிவிக்கப்பட்டு, அவர் தேர்தல் பிரசாரத்தையும் துவக்கியுள்ளார்.
தொகுதிக்குள் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிடவும், கண்காணிக்கவும், 32 அமைச்சர்கள் அடங்கிய இடைத்தேர்தல் பொறுப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்டச் செயலர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.,க்கள் கு.ப.கிருஷ்ணன், வைரமுத்து, ராஜநாயகம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராமையா, முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நெடுஞ்செழியன், ராஜு, நகராட்சி துணைத் தலைவர் சேட், பாசறை செயலர் ராஜசேகரன், மகளிரணி செயலர் சுபத்ராதேவி, நகரச் செயலர் பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை அறிமுகம் செய்து வைத்து, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
புதுக்கோட்டை அ.தி.மு.க., கோட்டை என்பது, ஏற்கனவே பலமுறை நடந்துள்ள தேர்தல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வரும் இடைத்தேர்தலில், புதுக்கோட்டை யாராலும் அசைக்க முடியாத அ.தி.மு.க.,வின் எக்கு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., 94 ஆயிரத்து 977 ஓட்டுகள் பெற்றது. வெற்றி வித்தியாசம், 68 ஆயிரத்து 757 ஓட்டுகள் தான். புதுக்கோட்டை தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தைவிட குறைவு என்பதால், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது. ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.
புதுக்கோட்டை அ.தி.மு.க.,வினரிடையே எந்த விருப்பு, வெறுப்பும் இல்லை. எனவே, இந்த வெற்றி இலக்கை எட்டுவது சுலபம் என்பதால், அனைவரும் பம்பரம் போல் சுழன்று தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
No comments:
Post a Comment