Sunday, April 22, 2012

தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு மின்சாரம் தர தயார்: கூடுதல் விலையால் தயக்கம்

தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு மின்சாரம் தர, குஜராத் தயாராக உள்ளது. ஆனால், கூடுதல் விலைக்கு வாங்கி, குறைந்த விலைக்கு வினியோகம் செய்ய, மாநில அரசுகள் தயாராக இல்லை,'' என்று குஜராத் மாநில எரிசக்தித் துறை முதன்மைச் செயலர் தெரிவித்தார். ஆனால், மின்சாரத்திற்கு தரப்படும் மானியம் அதிகரிக்கும் என்பதால், மாநில அரசுகள் தயங்குவதும் தெரியவந்துள்ளது.

குஜராத் மாநில எரிசக்தித் துறை முதன்மைச் செயலர் பாண்டியன். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தான், குஜராத்தில் சூரியசக்தி மின்சாரத் திட்டத்தை வெற்றிகரமாக அமைப்பதற்கு காரணமாக இருந்தவர்.

இவர் அளித்த பேட்டி:சூரியசக்தி மின்சாரத்தை, ஆரம்பத்தில் தெருவிளக்குகள், வாட்டர் ஹீட்டர் போன்றவற்றுக்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தினோம். மிகவும் வறட்சியான ஒதுக்குப்புற பகுதிகளில், கட்டடங்களின் கூரை மேல் சூரியசக்தி மின்சாரத்தை நிறுவ முக்கியத்துவம் அளிக்கிறோம்.ஒவ்வொரு மாநிலமும் ஐந்து மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை நிறுவும் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஒரு யூனிட் விலை 19 ரூபாயாக இருந்ததால், எந்த மாநிலமும் அதற்கு முன்வரவில்லை. ராஜஸ்தான் மட்டும் ஐந்து மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான இசைவு தந்தது. இதன்பின், மத்திய அரசு, ஒரு யூனிட், 17 ரூபாய் 90 காசு என்று மாற்றியது. அப்போதும் ராஜஸ்தான் தவிர வேறு மாநிலங்கள் முன்வரவில்லை.

சராசரி விலை குறைவு:குஜராத் மாநிலம் தனது கொள்கையை வெளியிட்டு, சராசரியாக 12 ரூபாய் என நிர்ணயித்தது. இதன்படி, முதல் 15 ஆண்டுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 15 ரூபாயும், அடுத்த 13 ஆண்டுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ஐந்து ரூபாயும் என நிர்ணயிக்கப்பட்டது. இதனால், சராசரி விலை 11 ரூபாய் 80 காசு என்ற அளவில் வந்தது.மின் உற்பத்திக்கு கையெழுத்திடும் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டத்தை முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்கா விட்டால், முதல் 90 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு ஒரு மெகாவாட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதற்கு அடுத்த நாட்களில், நாள் ஒன்றுக்கு ஒரு மெகாவாட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் இங்கு விதிக்கப்படுகிறது.மொத்தம் 985 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்திக்கு தனியாருடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில், 605 மெகாவாட் மின் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள மின்சாரம் வரும் டிசம்பருக்குள் உற்பத்தியாகும்.

கட்டடங்கள் மீது...:தற்போது காந்தி நகரில், கட்டடங்களின் கூரை மேல் சூரியசக்தி மின்சார உற்பத்தியை துவக்கும் திட்டத்தை, குஜராத் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு யூனிட் 11 ரூபாய்க்கு தர இரு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதில், மூன்று ரூபாயை கட்டட உரிமையாளருக்கு கொடுக்க வேண்டும். எனவே, மீதம் 8 ரூபாய்க்கு சூரியசக்தி மின்சாரம் கிடைக்கிறது. இதன்படி, தலா 2.5 மெகாவாட் வீதம் மொத்தம் ஐந்து மெகாவாட் மின் உற்பத்திக்கு இரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

வாங்க ஆளில்லை:குஜராத்தில் உபரியாக மின்சாரம் உள்ளதால், அதை மற்ற மாநிலங்களுக்கு விற்க தயாராகவே உள்ளோம். ஆனால், மற்ற மாநிலங்கள் வாங்க முன்வருவதில்லை. மக்கள் இருளில் இருந்தாலும் பரவாயில்லை என்று கருதி, அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி, குறைந்த விலைக்கு கொடுக்க அரசுகள் தயாராக இல்லை. மேலும், கட்டணத்தை உயர்த்தவும் மாநில அரசுகள் விரும்புவதில்லை. இதற்கு மானியச் சுமை காரணமாக இருக்கலாம்.சூரியசக்தி திட்டம் இங்கு வெற்றி பெற்றுள்ளதால், பல நிறுவனங்கள் தற்போது இங்கு உற்பத்தியை துவக்க முன்வந்துள்ளன. இனி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் விற்கப்படும் என்று உறுதியானால் மட்டுமே, இனி அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விலை எவ்வளவு:எரிவாயு மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு 3.50 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதுவே, இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் கிடைக்கும் மின்சாரத்துக்கு, 6 முதல் 8 ரூபாய் செலவாகிறது. அணுசக்தி மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு 1.90 ரூபாய் செலவாகிறது.


No comments:

Post a Comment