Monday, April 30, 2012

கலெக்டர் கடத்தல்: காட்டுக்குள் இருந்து தூதர்கள் கொண்டுவந்தது என்ன?


கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸை விடுவிக்கும் முயற்சியில், காட்டுக்குள் உள்ள நக்சலைட்டுகளின் மறைவிடத்துக்கு சென்ற தூதர்கள், சில தகவல்களுடன் திரும்பியுள்ளனர். கலெக்டர் அலெக்ஸ் பத்திரமாகவும் உடல் நலத்துடனும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காட்டுக்குள் உள்ள மாவோயிஸ்ட் அமைப்பிடம் இருந்து சில தகவல்களுடன் திரும்பியுள்ள தூதர்கள், மீடியாக்களிடம் அந்த தகவல்களை பகிர்ந்துகொள்ள மறுத்து விட்டனர். “நக்சல்களிடம் இருந்து தெரிந்துகொண்ட விஷயங்கள் பற்றி, அரசு தூதர்களிடம் மட்டுமே தெரிவிப்போம்” என்றனர்.

மாவோயிஸ்ட் தலைவர்களை சந்தித்து பேச, தூதர்கள் ஹர்கோபால் மற்றும் பி.டி.சர்மா முடிவு செய்தனர். அதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் சிந்தன்லார் நகருக்கு சென்றனர். அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதியான டாட்மெட்லாவுக்கு 2 பத்திரிகையாளர்களுடன் பைக்கில் புறப்பட்டனர்.

டாட்மெட்லா சென்றதும் இவர்களை சந்தித்த நக்சல்கள், தூதர்களை மட்டும் காட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

அங்கு நக்சல் தலைவர்களை சந்தித்து கலெக்டரை விடுவிப்பது தொடர்பாக பேசினர். இரவு நேரமாகி விட்டதால், காட்டிலேயே தங்கிய தூதர்கள், காலையில் சிந்தன்லார் திரும்பினர். இந்த இடம் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ளது.

சிந்தன்லாரில் செய்தியாளர்களிடம் பேசிய தூதர்கள், காட்டுக்குள் தாம் கலெக்டர் அலெக்ஸை நேரடியாகச் சந்திக்கவில்லை என்று தெரிவித்தனர். “கலெக்டர் உடல் நலத்துடன் உள்ளார் என்று மாவோயிஸ்ட் தலைவர்கள் எம்மிடம் கூறினார்கள். அவர்களது கூற்றை நாம் நம்புகிறோம்”

டாட்மெட்லா வனப்பகுதியில் கலெக்டர் வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி, நான்கு அடுக்கு பாதுகாப்பை நக்சலைட்டுகள் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. கலெக்டரை மீட்க பாதுகாப்பு அமைச்சு கமாண்டோ பாணியில் அதிரடி நடவடிக்கை ஏதாவது எடுக்கலாம் என்ற சந்தேகத்திலேயே, அவரைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடைய வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

ஆதிவாசிகளை சிறை பிடிப்போருக்கு விருது வழங்க கலெக்டர் அலெக்ஸ் பரிந்துரை செய்ததால் அவர்மீது நக்சல்கள் கோபம் அடைந்திருந்தார்கள் எனவும் தெரியவருகிறது. ஆனால், பணயக்  கைதியாக உள்ள அவருக்கு, போதிய உணவு மற்றும் மருந்து வசதிகளை நக்சல்கள் செய்து கொடுத்துள்ளனர்.

காட்டில் இருந்து வெளியே வந்துள்ள தூதர்கள் இருவரும், அரசு தூதர்களான முன்னாள் தலைமைச் செயலாளர்கள் நிர்மலா புச் மற்றும் எஸ்.கே.மிஸ்ராவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ராய்ப்பூர் சென்றிருக்கின்றனர்.

இந்த இரு தரப்பினருக்கும் இடையிலான இரு ரவுன்ட் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இது  மூன்றாவது ரவுன்ட் பேச்சுவார்த்தை!

No comments:

Post a Comment