Monday, April 30, 2012

கடாபி அரசின் வி.ஐ.பி. அமைச்சர், இறந்த நிலையில் வியன்னா ஆற்றில்!


லிபியாவின் முன்னாள் எண்ணைவளத் துறை அமைச்சர், ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த வருடம் லிபியாவின் கடாபிக்கு எதிரான புரட்சியின்போது, அரசில் இருந்து விலகி போராளிகளுக்கு ஆதரவு தெரிவித்த முதலாவது அரசு வி.ஐ.பி. இவர்.

69 வயதான சுக்ரி கானெம்மின் உடல், தனுபே ஆற்றில் மிதந்த நிலையில் காணப்பட்டது. மத்திய ஐரோப்பாவின் பிரபல ஆறுகளில் ஒன்றான தனுபே ஆற்றங்கரை ஓரமாக அவர் நடந்து சென்றபோது, இறந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

லிபியாவில் கடாபி ஆட்சி முடிவுக்கு வந்தபின் அங்கிருந்து வெளியேறிய இவர், வியன்னா நகரில், தனுபே ஆற்றங்கரை ஓரமாக உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தார் என்று தெரிகிறது. வியன்னாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு அருகே உள்ளது இந்த வீடு. வீட்டில் இருந்து அதிகாலையில் வாங்கிங் சென்ற அவர், அதன்பின் உயிருடன் வீடு திரும்பவில்லை.

ஆற்றில் மிதந்த அவரது உடலில் எந்த அடையாளமும் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளது ஆஸ்திரிய போலீஸ்.
“அவர் கொல்லப்பட்டார் என்பதற்கான எந்த அறிகுறியும் அவரது உடலில் வெளிப்படையாக காணப்படவில்லை. இருந்தும், அவர் ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்றபோது, ஆற்றில் யாராலோ தள்ளி விடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார் போலீஸ் பேச்சாளர்.

லிபியாவில் புரட்சி ஏற்பட்டு, யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாட்டில் இருந்து தப்பி டுனிசியா நாட்டுக்குள் புகுந்த சுக்ரி கானெம், அதன்பின் அங்கிருந்து ஐரோப்பாவுக்கு வந்திருந்தார். 2003-ம் ஆண்டில் இருந்து கடாபி அரசின் முக்கிய துறையான எண்ணைவளத் துறையின் அமைச்சராக இருந்தவர் இவர்.

இவர் பதவியில் இருந்தபோது, உலக அளவில் தலைப்புச் செய்திகளில் முதல் தடவை அடிபட்டது, “அமெரிக்க விமானம் பான்-ஆம் வானில் வெடித்துச் சிதறியதற்கு லிபியா எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை” என்று அறிவித்தபோது.

பான்-ஆம் விமான தட இலக்கம் 103, 1988-ல் ஸ்காட்லான்டுக்கு மேலாக பறந்தபோது வெடித்துச் சிதறியது. அதில் பயணம் செய்த அனைவரும் (270 பேர்) கொல்லப்பட்டனர்.

புலன் விசாரணைகளில் அந்த விபத்து, லிபிய உளவுத்துறையால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று பின்னர் தெரியவந்தது.

No comments:

Post a Comment