Monday, April 30, 2012

ராணுவ மர்மம்: 4 வெளிநாட்டவர்கள் ஆர்மோர்ட் காரில் செய்தது என்ன?


சூடானின் எல்லைப் பகுதியில் நான்கு பேர் ‘அடையாளம் காணப்படாத ராணுவ நடவடிக்கைகளில்’ ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் வெளிநாட்டவர்கள். ஒருவர் சூடானில் இருந்து சமீபத்தில் பிரிந்து தனிநாடாகிய தென் சூடான்காரர்.


நார்வே பிரஜை ஜான் சோர்போ

வெளிநாட்டுக்காரர்களில் ஒருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். மற்றையவர் தென் ஆபிரிக்கா நாட்டவர். மூன்றாவது ஆள் நார்வேக்காரர்.

இவர்கள் அனைவரும் ஹெக்லிக் நகரத்துக்கு அருகே, ராணுவ கவச வாகனம் (armoured vehicle) ஒன்றில், ராணுவ உபகரணங்களுடன் நடமாடியதாக கூறியே கைது செய்யப்பட்டுள்ளனர். “ஆர்மோர்ட் காரை வைத்துக் கொண்டு இவர்கள் செய்ய முயன்றது என்ன?” இந்தக் கேள்விக்கான பதிலை, சூடான் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஹெக்லிக் நகரம், சூடானின் எண்ணை வளம் கிடைக்கும் நகரங்களில் ஒன்று. சூடானில் இருந்து தென்சூடான் பிரிந்த பின்னர், சூடானின் எண்ணை வளம் மிக்க பகுதிகள் தமக்கு உரியவை என்று தென் சூடான் கூறிவருகிறது. ஓரிரு இடங்களை கைப்பற்றவும் செய்தது. ஆனால், கைப்பற்றிய பகுதிகளை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள முடியாமல், கைவிட்டுப் பின்வாங்க நேர்ந்தது.

அதனால்தான், தமது நாட்டின் எண்ணைவளம் மிக்க பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது சூடானிய ராணுவம். அந்த வகையில் ராணுவ கண்காணிப்பு அதிகமாக இருந்த ஹெக்லிக் நகரத்துக்கு அருகே, இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த என்.ஜி.ஓ. ஊழியர்கள் என்று கூறுகிறது அவர்களை பணியில் அமர்த்திய நிறுவனம்.

சூடான் ராணுவத்தின் பேச்சாளர் கர்னல் சவர்மி காலித் சாத், “ராணுவ கவச வாகனம் ஒன்றில் நகருக்குள் சுற்றித்திரிந்த இந்த நால்வரும் வெறும் என்.ஜி.ஓ. ஊழியர்கள் மட்டுமல்ல. அவர்கள் நால்வருக்குமே பலமான ராணுவப் பின்னணி உள்ளது” என்று அரசுத் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.

இதில் தொடர்புடைய என்.ஜி.ஓ. நிறுவனம் Norwegian People’s Aid humanitarian organisation, தமது நிறுவனத்தில் பணிபுரியும் நார்வே பிரஜை ஜான் சோர்போ, சூடானுக்குள் ராணுவ நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. என்று அடித்துச் சொல்கிறது.

“அவர் செலுத்திச் சென்ற வாகனம், கண்ணிவெடி தேடும்போது பயன்படுத்தப்படும் கவச வாகனம்தான். அது ராணுவ தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் வாகனம் அல்ல” என்றும் கூறுகிறார்கள் அவர்கள்.

ஜான் சோர்போவின் ராணுவத் தொடர்பு பற்றி சூடான் ராணுவ பேச்சாளர் கூறிய விஷயத்தில், ஓரளவு உண்மை உள்ளது. எப்படியென்றால், என்.ஜி.ஓ. நிறுவனத்தில் பணியாற்ற வருவதற்குமுன் அவர் நார்வே நாட்டு ராணுவத்தில் பணியாற்றி உள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பிரிட்டிஷ் பிரஜை பற்றிய விபரங்களை தற்போதுதான் சேகரிக்க துவங்கியுள்ளதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்க, மற்றும் தென் சூடானைச் சேர்ந்த நபர்கள் யார் என்ற விபரம் இன்னமும் வெளியிடப்படவில்லை..

No comments:

Post a Comment