Sunday, April 22, 2012

"வெக்ட்ரா' நிறுவன தலைவருடன் நெருக்கம் யார்?சி.பி.ஐ., விசாரணை தீவிரம்: அதிகாரிகள் கலக்கம்


புதுடில்லி:ராணுவ வாகனக் கொள்முதலில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில் சிக்கியுள்ளவர்களுக்கு எதிராக, சி.பி.ஐ.,யின் பிடி மேலும் இறுகியுள்ளது. வெக்ட்ரா நிறுவன தலைவர் ரவி ரிஷிக்கு நெருக்கமான அதிகாரிகளைப் பற்றியும், அவர்களின் பின்னணி குறித்தும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.

ராணுவத்துக்கு தேவையான வாகனங்களை, டாட்ரா என்ற நிறுவனம் சப்ளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை, வெக்ட்ரா என்ற நிறுவனம் வைத்திருக்கிறது. இதன் தலைவராக இருப்பவர், பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற ரவி ரிஷி.ராணுவ வாகனக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

விசாரணை : இந்த முதல் தகவல் அறிக்கையில், வெக்ட்ரா தலைவர் ரவி ரிஷியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை ஒன்பதுக்கும் மேற்பட்ட முறை, ரவி ரிஷியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
இந்நிலையில், ரவி ரிஷிக்கு நெருக்கமான சில அதிகாரிகளுக்கும், முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என, சி.பி.ஐ., சந்தேகிக்கிறது. எனவே, ரவி ரிஷிக்கு நெருக்கமான அதிகாரிகளையும், தன் கண்காணிப்பு மற்றும் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர, சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஐ.ஏ.எஸ்., தம்பதி: சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணைக்குள், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., தம்பதி முதலில் சிக்கியுள்ளனர். இந்த தம்பதியின் வீட்டில், கடந்த 2010ல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இருவரும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்த தம்பதியில் ஒருவர், ராணுவ அமைச்சகத்தின் இணைச் செயலராக இருந்தபோது, ரவி ரிஷிக்கும், இவர்களுக்கும் நட்பு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையேயான நட்பு, மேலும் பலப்பட்டதாகவும், சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தம்பதிக்கு, ரவி ரிஷியுடன் இன்னும் நட்பு தொடர்வதாகவும், தங்களின் பெருமளவு பணத்தை, ரவி ரிஷியிடம் இவர்கள் கொடுத்து வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ரவி ரிஷிக்கு நெருக்கமான மேலும் சில அதிகாரிகளும், சி.பி.ஐ.,யின் கிடுக்கிப் பிடியில் சிக்குவார்கள் என, சி.பி.ஐ,, தரப்பு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment