Saturday, April 21, 2012

பதவிக்கு ஆசைப்பட்டு அதிமுகவுடன் சேரவில்லை! நான் முதல் அமைச்சராக வருவேன்! விஜயகாந்த் பேச்சு!

தே.மு.தி.க. வெற்றி பெற்ற தொகுதிகளில் தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்று வருகிறார். கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த அவர் கோவை மற்றும் சூலூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

இதன் பிறகு இரவு ஈரோடு வந்த விஜயகாந்த் வ.உ.சி. பூங்கா அருகே உள்ள ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்தார். சனிக்கிழமை (21.04.2012) காலை ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அவர்களிடம் மனுக்களை பெற்றார்.

அப்போது விவசாயிகள் சங்கத்தினர் தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்திடம் மஞ்சள் விலை வீழ்ச்சி தொடர்பாக மனுக்களை கொடுத்தனர். அப்போது அவர்கள் மஞ்சள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இது தொடர்பாக வருகிற ஜூலை மாதம் மாநாடு நடத்த உள்ளோம். இதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினர்.

இதற்கு பதில் அளித்து விஜயகாந்த் பேசும்போது, அந்த நேரத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நீங்கள் நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று கூறினார். இதன் பிறகு விவசாயிகளிடம், விஜயகாந்த் கூறியதாவது:

நாட்டின் உயிர் நாடியாக விளங்குவது விவசாயம்தான். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை பாதுகாக்க குளிருட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்க வேண்டும். இதை நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், கடந்த தி.மு.க. அரசோ, இப்போது ஆட்சியில் இருக்கும் அ.தி. மு.க. அரசோ இதுபற்றி செவிசாய்க்கவில்லை.



இது தொடர்பாக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டு அ.தி.மு.க.வுடன் கூட்டு சேரவில்லை. மக்கள் பிரச்சினைக்காகத்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்தோம். சட்டசபையில் நாங்கள் பேச அனுமதிப்பதில்லை. நாங்கள் பேசும்போது மைக்கை ஆப் செய்து விடுகிறார்கள். இதனால் நாங்கள் சட்டசபையில் என்ன பேசுகிறோம் என்பது மக்களுக்கு தெரிவது இல்லை.

சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று எந்த விதிகளும் இல்லை. 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் கையெழுத்து போட்டால் போதும். மக்கள் பிரச்சினையை சட்டமன்றத்தில்தான் பேச வேண்டும் என்பதில்லை.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சினைகளை பேசி வருகிறேன். அவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்று விடுகிறேன். நான் முதல்  அமைச்சராக வருவேன். அப்போது விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment