Sunday, April 22, 2012

மேட்டூரில் தே.மு.தி.க., தண்ணீர் பந்தல் வெறிச்சோடி கிடப்பதால் மக்கள் ஏமாற்றம்

 மேட்டூர் பஸ் ஸ்டாண்டில், தே.மு.தி.க., சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில், தண்ணீர், மோர் எதுவும் விநியோகம் செய்யாமல் உள்ளதால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கோடைகாலத்தை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி பஸ் ஸ்டாண்ட் உள்பட முக்கிய இடங்களில் பொதுமக்கள் தாகம் தணிக்க நீர், மோர்பந்தல் அமைக்க தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் இரு வாரத்துக்கு முன், தே.மு.தி.க., சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. தண்ணீர் பந்தலை, தே.மு.தி.க., மாவட்ட செயலாளரும், மேட்டூர் எம்.எல்.ஏ.,வுமான பார்த்திபன் திறந்து வைத்தார். துவக்க நாளில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர்) விநியோகம் செய்யப்பட்டது.
அடுத்த இரு நாள் மதியம் மட்டும் சிறிது நேரம் குடிநீர் வழங்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் பந்தலை கட்சி நிர்வாகிகளே கண்டு கொள்ளவில்லை. இதனால், குடிநீர் பந்தலை அருகில் இளநீர் விற்கும் வியாபாரிகளும், கூல்டிரிங்க்ஸ் விற்பவர்களும் ஆக்ரமித்துள்ளனர். இதனால், விஜயகாந்த் பேனருடன் கூடிய தண்ணீர் பந்தலை பார்த்து விட்டு குடிநீர் பருக செல்லும் பொதுமக்கள், பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
தே.மு.தி.க., சார்பில் இலவச நீர், மோர் பந்தல் அமைத்துள்ள நிலையில், மக்களுக்கு எந்தவித உபயோகமும் இன்றி கிடப்பது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ., பார்த்திபன் கோடைகாலம் முடிய தாகம் தீர்க்கும் வகையில் தொடர்ச்சியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment